செய்தி மற்றும் நிகழ்வுகள்

கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் திருமலை மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு
திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (18.06.2019) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடுத்தில் நடைபெற்றது. 


பதவியேற்றதையடுத்து முதன் முதலாக மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த ஆளுனருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் வெற்றிலை கொடுத்து வரவேற்றார். 
மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் வரவேற்புரையுடன், கிழக்கு மாகாண தில் பிரதம செயலாளர் திருமதி கே.முரளிதரனின் பங்குபற்றலுடன் இக் கூட்டம் நடைபெற்றது. அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாகாண திட்டமிடல் பிரதிச் செயலாளர் என்.தமிழ்ச்செல்வன் திட்ட வாரியாக விளக்கமளித்தார், அத்துடன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். 

இதில், மாகாண சபையின் அமைச்சுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பகவும் விரிவாக ஆராயப்பட்டது. 
அத்தோடு இத்திட்டங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த மாகாண ஆளுனர், அவற்றின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்ல் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.

இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், மாகாணத்தின் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.